March 14, 2026

110 மாணவர்கள் பட்டம் பெற்ற ஸ்ரீ பாலாஜி பல் மருத்துவக் கல்லூரியின் 32-வது பட்டமளிப்பு விழா

0
IMG_1533

சென்னை, ஜனவரி 2026: இந்தியாவில் சிறந்த பல் மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி மையம் என புகழ் பெற்றிருக்கும் ஸ்ரீ பாலாஜி பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் (SBDCH) 32-வது பட்டமளிப்பு விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் 84 பிடிஎஸ் மற்றும் 26 எம்டிஎஸ் பட்டப் படிப்புகளில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் என மொத்தத்தில் 110 பேருக்குப் பட்டங்கள் வழங்கப்பட்டன. கல்வியில் சிறந்து விளங்கிய மாணாக்கர்களுக்கு இந்நிகழ்வில் பதக்கங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இந்தியப் பல் மருத்துவக் கவுன்சிலின் (DCI) செயற்குழு உறுப்பினர் பேராசிரியர் டாக்டர் ராகுல் ஹெக்டே சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். இக்கல்விக் குழுமத்தின் நிறுவனரும், தலைவருமான டாக்டர் ஜெகத்ரட்சகன் தலைமையில் இவ்விழா நடைபெற்றது. ஸ்ரீ பாலாஜி குழுமத் தலைவர் டாக்டர் ஜெ. ஸ்ரீநிஷா, ஸ்ரீபாலாஜி மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனையின் மேலாண் இயக்குநர் பொறியியலாளர் என். இளமாறன், பாரத் உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்) துணைவேந்தர் டாக்டர் சுந்தரராஜன் மற்றும் பதிவாளர் டாக்டர் எஸ். பூமிநாதன் ஆகியோர் முன்னிலை வகித்த இந்நிகழ்வு மிக விமரிசையாக நடைபெற்றது.

ஸ்ரீ பாலாஜி மருத்துவக் கல்லூரிகள் மற்றும் மருத்துவமனை குழுமத்தின் தலைவர் டாக்டர் ஜே. ஸ்ரீநிஷா பேசுகையில், “தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பின் (NIRF) 2025-ஆம் ஆண்டுப் பட்டியலில், இந்தியாவில் உள்ள சுமார் 340 பல் மருத்துவக் கல்லூரிகளில், இக்கல்லூரி தேசிய அளவில் 27-வது இடத்தையும், தமிழக அளவில் 5-வது இடத்தையும் பிடித்து பெருமைப்படக்கூடிய சாதனை படைத்துள்ளது,” என்றார்.

பட்டம் பெற்ற மாணவர்களுக்கு அவர்களது கல்வி சாதனைகளுக்காக வாழ்த்து தெரிவித்த அவர், நேர்மையுடனும் நோயாளிகளின் நலனில் அக்கறையுடனும் பணியாற்றி சமூகத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்று அவர்களை கேட்டுக்கொண்டார். தங்களுக்கு ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்குவதற்கு கற்ற அறிவையும், கல்விகளையும் பயன்படுத்துவதோடு, எதிர்கால தலைமுறையினருக்கும் பயனுள்ள விதத்தில் பணியாற்றுவது புதிய பட்டதாரிகளின் கடமைப்பொறுப்பாக இருக்க வேண்டுமென அவர் வலியுறுத்தினார். இக்கல்லூரி வழங்கிய வலுவான கல்வி மற்றும் நேரடி செய்முறை பயிற்சியின் காரணமாக, பல் மருத்துவ துறையில் சிறப்பான பங்களிப்புகளை புதிய பட்டதாரிகள் வழங்குவார்கள் என தனது நம்பிக்கையையும் அவர் வெளிப்படுத்தினார்.

கல்லூரியின் முதல்வர் டாக்டர் எம்.எஸ். கண்ணன் தனது உரையில், “எமது கல்லூரி லீட்ஸ் பல்கலைக்கழகம் மற்றும் தாய்லாந்தின் சியாங் மாய் பல்கலைக்கழகம் உட்பட 36 தேசிய மற்றும் சர்வதேச நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளது. இது மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்குப் புதிய ஆராய்ச்சி வாய்ப்புகளையும், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பரிமாற்றத்தையும் வழங்கும்,” என்று குறிப்பிட்டார். அத்துடன், முனைவர் பட்டப்படிப்புகள் உட்பட, இரட்டை – பட்டம் பெறுவதற்கான கல்வி திட்டங்களையும் இது ஏதுவாக்கும் என்று அவர் கூறினார்.

கடந்த சில ஆண்டுகளில் இக்கல்வி நிறுவனம் 1,400-க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பித்துள்ளதாகவும், 50-க்கும் மேற்பட்ட காப்புரிமைகளைப் பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 25.4% வளர்ச்சி பதிவுடன், மொத்தத்தில் சுமார் 1.5 லட்சத்திற்கும் அதிகமான நோயாளிகளுக்கு இம்மருத்துவமனை சிகிச்சை சேவையை வழங்கியுள்ளது என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டார். இதற்கும் கூடுதலாக, மருத்துவ சேவை மற்றும் விழிப்புணர்வுக்காக சமூகத்தினரின் அமைவிடங்களுக்கே சென்று மேற்கொள்ளப்படும் 70-க்கும் அதிகமான செயல்திட்டங்கள் நடத்தப்பட்டுள்ளதாகவும் டாக்டர் கண்ணன் கூறினார்.

கிளாஸ்கோவின் ராயல் காலேஜ் ஆஃப் பிசிஷியன்ஸ் மற்றும் சர்ஜன்ஸ் (Royal College of Physicians and Surgeons of Glasgow) நடத்தும் MOrth தேர்வினை நடத்தும் ஆசியாவின் ஒரே தேர்வு மையமாக ஸ்ரீ பாலாஜி பல் மருத்துவக் கல்லூரி திகழ்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு நவம்பர் 19 முதல் 21-ம் தேதி வரை இத்தேர்வு இக்கல்லூரியில் நடத்தப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *