ஜூன் 19, 20, 21 தேதிகளில் நடைபெறும்கலைமாமணி மதுரை ஆர். முரளிதரன்-ன் “சப்ததாள லஹரி”பரதநாட்டியத்தில் புதிய சாதனை

ஜூன் 15, சென்னை
சென்னையைச் சேர்ந்த புகழ்பெற்ற நடனக் கலைஞர், இசையமைப்பாளர், நடன இயக்குநர், எழுத்தாளர், பாடலாசிரியர், நாடக ஆசிரியர், இயக்குநர் மற்றும் நிருத்யக்ஷேத்ரா நடனப் பள்ளியின் கலை இயக்குநர் என பன்முகத்திறன் கொண்ட கலைமாமணி மதுரை R. முரளிதரன்,பரதநாட்டிய உலகில் மற்றுமொரு பிரம்மாண்டமான படைப்பான ‘சப்ததாள லஹரி’-யை ஜூன் 19, 20 மற்றும் 21, 2026 ஆகிய தேதிகளில் அரங்கேற்றவுள்ளார்.
புகழ்பெற்ற இந்த பரதநாட்டியக் கலைஞரின் தனித்துவமான படைப்பான ‘சப்ததாள லஹரி’, பாரம்பரிய ‘மார்க்கம்’ முறையின் வெளிப்பாட்டு மற்றும் கட்டமைப்பு சாத்தியங்களை விரிவுபடுத்தும் ஒரு அற்புதமான கலை படைப்பாகும்; ஒரு மாறுபட்ட, புதுமையான முயற்சியாகும்.
கர்நாடக இசையில் உள்ள 35 சூளாதி சப்த தாள முறையை அடிப்படையாகக் கொண்டு மார்க்கங்களை உருவாக்கும் மதுரை R. முரளிதரனின் இலட்சியப் பயணத்தில் ‘சப்ததாள லஹரி’ ஒரு முக்கிய மைல்கல்லாகும். இது தாளம் என்ற கருத்தை மிகச் சிறந்த கட்டமைப்பாகவும் கணித வடிவமாகவும் விரிவுபடுத்துகிறது. துருவ, மட்ய, ரூபக, ஜம்ப, திரிபுட, அட மற்றும் ஏக ஆகிய 7 அடிப்படைத் தாளங்கள், திஸ்ர, சதுஸ்ர, கண்ட, மிஸ்ர மற்றும் சங்கீர்ண ஆகிய 5 வகையான ஜதிகளுடன் (தாள அமைப்புகள்) இணைக்கப்பட்டு இது சிறப்பாக உருவாக்கப்பட்டுள்ளது.
“பாதை” என்று பொருள்படும் மார்க்கம் என்பது பரதநாட்டியத்தின் பாரம்பரிய நடன நிகழ்வின் கட்டமைப்பாகும். பௌதிக, உடல் சார்ந்த நிலையிலிருந்து ஆன்மீக நிலையை நோக்கிய பயணமாக பரதநாட்டிய நடன நிகழ்ச்சி இருக்கிறது: அலாரிப்பு (இறை வேண்டல் நடனம்); புஷ்பாஞ்சலி (இறைவனின் ஆசி வேண்டி மலர் தூவுதல்); ஜதீஸ்வரம் (தாளம் மற்றும் மெல்லிசையின் கலவை); வர்ணம் (நிருத்தம் மற்றும் அபிநயம் ஆகிய இரண்டையும் வெளிப்படுத்தும் மையப் பகுதி); பதம் (கதை சொல்லும் அபிநயம் சார்ந்த பகுதி); மற்றும் தில்லானா (தாளம் மற்றும் அசைவுகளைக் கொண்ட உற்சாகமான, ஆனந்தமான இறுதிப் பகுதி).
ஏற்கனவே 18 முழுமையான மார்க்கங்களை உருவாக்கி சாதனை படைத்திருக்கும் திரு. முரளிதரன் இப்போது 35 மார்க்கங்களையும் உருவாக்கி அதனை முழுமையாக்கும் நோக்கில் தனது ஆராய்ச்சி பயணத்தைத் தொடர்கிறார். இது பரதநாட்டிய வரலாற்றில் இதுவரை யாரும் செய்திராத ஒரு சாதனை என்பதில் ஐயமில்லை.
மூன்று நாட்கள், தினமும் மாலை மூன்றரை மணி நேரம் நடைபெறும் இந்த பிரம்மாண்ட நிகழ்ச்சியில், திரு. முரளிதரன் தனது 11 சீடர்களுடன் இணைந்து 7 வெவ்வேறு மார்க்கங்களை வழங்கவுள்ளார். இதன் மூலம் அவர் நிறைவு செய்த மார்க்கங்களின் எண்ணிக்கை 25 ஆக உயரும். இது கலை மீதான அவரது அர்ப்பணிப்பு, ஆழ்ந்த நிபுணத்துவம் மற்றும் புதுமைகளை கண்டறிந்து அறிமுகம் செய்வதில் இவர் கொண்டிருக்கும் அளப்பரிய ஆர்வத்திற்கு சிறந்த சான்றாகும்.
இந்த நிகழ்ச்சியைப் பற்றி கலைமாமணி மதுரை R. முரளிதரன் கூறுகையில்: “சப்ததாள லஹரியை உயிரோட்டத்துடன் மேடையில் வழங்க நானும் எனது மாணவர்களும் மிகுந்த ஆர்வத்துடனும் அர்ப்பணிப்புடனும் உழைத்து வருகிறோம். இந்தப் படைப்பு பல ஆண்டுகால ஆராய்ச்சி, பயிற்சி மற்றும் தாளத்துடனான எங்களின் ஆழமான ஈடுபாட்டின் முழுமையான வடிவமாகும். பரதநாட்டியத் துறையில் இதுவரை யாரும் செய்திராத ஒரு மாபெரும் முன்னெடுப்பை பாரம்பரியமான பரதநாட்டியக் கலையின் ஆர்வலர்களுக்கு சமர்ப்பிப்பதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். ஒவ்வொரு நடனப் பகுதியும் தாளத்தின் அழகு, சிக்கலான தன்மை மற்றும் ஆன்மீக ஆற்றலைக் கொண்டாடுகிறது. இது வெறும் நடன நிகழ்ச்சி மட்டுமல்ல, தாளத்தின் ஆழத்தில் பார்வையாளர்களை மூழ்கடிக்கும் ஒரு அனுபவமாகும். இந்த தனித்துவமான மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்ச்சியைக் காண சென்னையைச் சேர்ந்த கலாரசிகர்களை நான் அன்புடன் அழைக்கிறேன்” என்று குறிப்பிட்டார்.
இந்த நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர்களாக கீழ்வரும் சிறந்த நடனக் கலைஞர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் இசைக்கலைஞர்கள் பங்கேற்கின்றனர்: திருமதி. நந்தினி ரமணி, டாக்டர் வசந்தலட்சுமி நரசிம்மாச்சாரி, டாக்டர் ‘கடம்’ கார்த்திக், பத்ம விபூஷண் டாக்டர் பத்மா சுப்ரமணியம், திரு. பி. உன்னிகிருஷ்ணன், பத்மபூஷண் டி.வி. கோபாலகிருஷ்ணன், டாக்டர் கே. சுரேஷ், பத்மபூஷண் மதுரை டி.என். சேஷகோபாலன், டாக்டர் ஸ்ரீநிதி சிதம்பரம், பத்மஸ்ரீ டாக்டர் திருவாரூர் பக்தவத்சலம், திருமதி. ரோஜா கண்ணன், டாக்டர் கே. நிர்மலா நாகராஜன், டாக்டர் நித்யஸ்ரீ மகாதேவன், சிக்கில் திரு. சி. குருசரண், திருமதி. பிரியா முரளி, திரு. கே.வி. பிரசாத் மற்றும் டாக்டர் ஸ்ரீலதா வினோத்.
1978 ஆம் ஆண்டு சென்னையில் தொடங்கப்பட்ட நிருத்யக்ஷேத்ரா நடனப் பள்ளியின் நிறுவனரான மதுரை R. முரளிதரன். கடந்த பல தசாப்தங்களாக, உலகம் முழுவதும் 2,500-க்கும் மேற்பட்ட நடனக் கலைஞர்களுக்குப் பயிற்சி அளித்து, பரதநாட்டியக் கலையில் தனது சிறப்பான முத்திரையைப் பதித்துள்ளார்.
இவரது கலைப் பயணத்திற்கு அவரது மனைவி திருமதி. சித்ரா முரளிதரன் பெரும் உறுதுணையாக உள்ளார். மேலும், இந்த நடனப் பள்ளியின் தொலைநோக்குப் பார்வைக்கும் கலைச் செயல்பாடுகளுக்கும் அவரது மகள் காவ்யா முரளிதரனின் தீவிரமான பங்களிப்பு, அடுத்த தலைமுறைக்கும் இவரது கலைப்பயணத்தை மேலும் சிறப்பாக எடுத்துச் செல்லும் என நம்பலாம்.
நிகழ்ச்சி விவரங்கள்:
தேதிகள்: ஜூன் 19, 20 & 21, 2026
நேரம்: மாலை 5:30 – இரவு 9:00 மணி
இடம்: கிருஷ்ண கான சபா, சென்னை
அனைவரும் வருக!
மேலும் விவரங்கள் மற்றும் தொடர்புக்கு:
aalaap.concepts@gmail.com
