குடும்பத்தினரால் கைவிடப்பட்ட மனநலம் பாதிக்கப்பட்ட பெண்களுடன் தீபாவளி பண்டிகையை கொண்டாடிய கேளம்பாக்கம் காவல்துறையினர்
08.11.2026 அன்று செங்கல்பட்டு மாவட்டம் கோவளத்தில் குடும்பத்தினரால் கைவிடப்பட்டு, மனநலப் பாதிப்புகளுடன் வாழ்ந்து வரும் 100-க்கும் மேற்பட்ட பெண்களை பாதுகாப்பாக தங்கவைத்து பராமரிக்கப்பட்டு வரும் பேனியன் அகாடமி ஆஃப் லீடர்ஷிப் இன் மென்டல் ஹெல்த் (Banyan Academy of Leadership in Mental Health) அமைப்பில், கேளம்பாக்கம் காவல்துறையினர் சார்பில் தீபாவளி பண்டிகை மகிழ்ச்சியுடன் கொண்டாடப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் கேளம்பாக்கம் காவல் உதவி ஆணையாளர் ஜான் விக்டர் மற்றும் கேளம்பாக்கம் காவல் ஆய்வாளர் தமிழன்பன் ஆகியோர் தலைமையில் காவல்துறையினர் கலந்து கொண்டு அங்கு தங்கியுள்ள பெண்களுடன் அன்பையும் மகிழ்ச்சியையும் பகிர்ந்து கொண்டனர்.
மேலும், அவர்களுக்கு தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவித்து, இனிப்புகள் வழங்கி, அவர்களுடன் கலந்துரையாடி மகிழ்ச்சியாகப் தீபாவளி பண்டிகையைக் கொண்டாடினர்.
குடும்பத்தினரால் கைவிடப்பட்டு ஆதரவின்றி வாழும் பெண்களும் சமூகத்தின் ஓர் அங்கமே என்பதை உணர்த்தும் வகையில், அவர்களுடன் நேரம் செலவிட்டு, அவர்களின் முகத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்திய இந்த நிகழ்வு அனைவரின் பாராட்டுகளையும் பெற்றது.
தமிழ்நாடு காவல்துறை என்பது சட்டம் ஒழுங்கைப் பாதுகாப்பதோடு மட்டுமல்லாமல், ஆதரவற்றவர்களுக்கு அன்பும் அரவணைப்பும் அளிக்கும் மனிதநேயத் துறையாகவும் திகழ்கிறது என்பதை இந்த நிகழ்வு மீண்டும் நிரூபித்துள்ளது.
